Category Archives: ஸர்வ ஸமர்ப்பணம்

ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | ஜல்பம் – 6 | MUSINGS – 6

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஒம்

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

சிவன் எங்கு இருக்கமாட்டான்? (அ) சிவனை கோவிலிலிருந்து வெளியேற்றுவது எப்படி?

தீக்ஷிதனாகிய ஆச்சாரியார், பக்தி இல்லாதவனாக பூஜித்தால், ராஜா, ராஜ்யம் இவர்களுக்கு கெடுதல்; அது எவ்விதம் எனில், காட்டில் இருக்கிற துஷ்ட மிருகமாகிற ஸிம்ஹத்தைக் கண்ட யானையானது எப்படி பயம் அடையுமோ, அதுபோல் பக்தியில்லாத ஆச்சாரியனைப் பார்த்த உடனே சிவபெருமான் பயம் அடைந்து (விலகி விடுவார்) மந்திரம் இல்லாமல் அர்ச்சனை செய்தால், அந்த ஈச்வரன் பயம் அடைவார் (விலகி விடுவார்). (காரண ஆகமம் – பூஜாவிதி படலம் – ஸ்லோகம் 311 – 312), மேல் விபரம் இங்கு காண்க!

ஒவ்வொரு கிரியையும், அதற்கேற்ற பாவனை, மந்திரங்களுடனேயே செய்யப்படல் வேண்டும். பாவனை இல்லாது, வெரும் மந்திரங்களுடன் மட்டும் செய்தால், அது பயனற்றவை ஆகும். பாவனையும் இல்லாது மந்திரங்களும் இல்லாது கிரியைகளை செய்தால், அச்செயல் தேவர்களை மகிழ்விக்காது, அசுரர்களையே மகிழ்விக்கும். அதன்காண், பூஜைகளின் முழுப்பயனும், மக்களை சென்று அடைய பாவனை, கிரியை, மந்திரம் மூன்றிலும் லோபம் (குறை) இருத்தல் கூடாது.

அப்படி அகலும் தருணத்திலேயே, இறைவன், தன் சன்னதியில் உபச்சாரம் செய்யாமல் அபச்சாரம் செய்தவனுக்கு, ஸந்ததி இல்லாதிருக்கட்டும் என்றும், இச்சந்ததியினர் என்றும் தம்மை ஆராதிக்க தகுதியில்லாதவர் என்றும் எண்ணி அகலுகிறார்.

அங்ஙனமாயின், பக்தி, ஆச்சாரம், அனுஷ்டானம் இல்லாத இடத்தில் இறைவன் இருப்பதில்லை என்றே பொருள். இறைவன் இல்லாத இடத்தில் இறைவி எப்படி இருப்பாள்? அம்மையும் அகன்றிருப்பாளே! அய்யனும், அம்மையும் இல்லாத இடத்தில் உப, பரிவார தேவதைகளும் இருக்கமாட்டார்களே, அவர்களோடு, அந்த க்ஷேத்ரத்தில் வழிபடுகின்ற சித்தர் பெருமக்களும் அகன்றிருப்பார்களே, ஆகையால், ஒருவர் செய்யும் தவறினால் ஆராதிக்கும் அனைவரும் ஆராதனையின் பலனிளக்கிறார்கள் அன்றோ!

ரௌத்திரனுக்கே, பயம் என்ற சொல்லே தெரியாத இறைவனையே அனுஷ்டானக் குறையால் ஓட்டுவிக்கும் செயல் நமக்கு பலனளிக்குமா?

சுபம்

ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | ஸர்வ ஸமர்ப்பணம் | Sarva Samarppanam

ஸர்வ ஸமர்ப்பணம் | Sarva Samarppanam

மஹா பெரியவா

சரீரம், ஆத்மா எல்லாவற்றையும் அம்பாள் ஈச்வரார்ப்பணம் பண்ணுவது பற்றி நடுவாந்தரத்தில் பேச்சு வந்தது. இந்த விஷயத்தையே அம்பாளிடம் நம்மை அர்ப்பித்துக் கொள்வதாக

ஜபோ ஜல்ப:சில்பம் ஸகலம் அபி முத்ரா விரசநா
கதி ப்ராதக்ஷிண்ய – க்ரமணம் அசனாத்- யாஹதி விதி:
ப்ரணாம:ஸம்வேச:ஸுகம் அகிலம் ஆத்மார்பண- த்ருசா
ஸ்பர்யா-பர்யாய: தவ பவது யந்-மே விலஸிதம்||  – என்ற (27வது) ச்லோகத்தில் விளக்கமாகச் சொல்கிறார்.

நாம் பண்ணுகிற ஸகல காரியமும் அம்பாளுக்கு அர்ப்பணமாகி விடவேண்டும் என்பது சுருக்கமாக இதன் தாத்பர்யம். பூஜை, ஜபம், அதிலே கைவிரல்களால் முத்ரை காட்டுவது, பிரதக்ஷிண நமஸ்காரம், தேவி மந்த்ரங்களால் சண்டி ஹோமம் போன்றவற்றில் ஆஹுதிகளைக் கொடுப்பது என்று அம்பாள் பரமாக அநேக காரியங்களை உபாஸகர்கள் பண்ணுகிறார்களல்லவா? இவை எல்லாம் பண்ண வேண்டியதுதான். ஆனாலும் இந்த பூஜை, ஜபம், ஹோமம் முதலியவை அததைக் கொஞ்ச காலம் பண்ணுவதோடு முடிந்து போவதாகவும், அப்புறம் தன் பாட்டுக்கு லௌகீக பிரவிருத்திகளிலே ஈடுபட்டு இந்திரிய ஸுகங்களைத் தேடிக் கொள்வதாகவும் இருக்கிற நிலைமை மாற வேண்டும். கொஞ்சம் வேளை அம்பாள், மிச்சம் வேளை ஸம்ஸாரம் என்றில்லாமல் ஸதா காலமும் அவள் பூஜையாக, ஜபமாக ஹோமமாக இருக்கும்படிப் பண்ணிக் கொள்ள வேண்டும். உபாஸகர்கள் என்பவர் மட்டுமில்லாமல் எல்லாருமே இப்படிச் செய்யவேண்டும்.

“அதெப்படி எப்போதும் இவற்றைப் பண்ண முடியும்? குளிக்க வேண்டாமா? சாப்பிட வேண்டாமா? தூங்க வேண்டாமா? லோக வாழ்விலே நாலு பேரிடம் பிரியமாகப் பேச வேண்டாமா? நல்லது சொல்ல வேண்டாமா? நாலு இடத்துக்கு ப் போக வேண்டாமா? கையை காலை அசைத்து ஏதோ பரோபகாரமாக காரியம் பண்ண வேண்டாமா? மஹா ஞானிகளாக இருக்கப்பட்டவர்களிடங்கூட இவையெல்லாம் இருக்கத்தானே செய்கிறது.”

ஆமாம். இதெல்லாம் இருக்கட்டும். அவள் லீலையில் இருந்துதான் ஆகவேண்டும். ஆனால் அந்த ஞானிகள் எப்படி இதையெல்லாம் லீலை என்று தெரிந்துகொண்டு பண்ணியும் பண்ணாமலிருக்கிறார்களோ, அப்படி நீயும் ஆகப் பாரு. இப்போதே அப்படி இருப்பதென்றால் முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக யத்தனம் செய்து, அப்யாஸத்தால் அந்த நிலைக்கு வா. இப்போதைக்கு குளிப்பது, சாப்பிடுவது, பேசுவது, தூங்குவது, நடப்பது மற்ற வேலை செய்வது எல்லாமே அவளுடைய சக்தியால் நடக்கிறது – நாமாக ஒன்றும் பண்ண முடியாது என்ற நினைப்பை அப்பப்போ உண்டாக்கிக் கொள்ளு. இந்த நினைப்பை விருத்தி பண்ணிக் கொண்டே போ. அம்பாள் கொடுத்த சக்தியால் சாப்பிடுகிறோம் என்று நினைக்கும் போது கெட்ட பதார்த்தங்களை உள்ளே தள்ளத் தோன்றாது. அம்பாள்தான் நடக்க சக்தி தருகிறாள் என்ற ஞாபகம் இருக்கும்போது ரேஸுக்கும், ஸினிமாவுக்கும் போகத் தோன்றாது. அவள் கொடுப்பது வாக்கு என்னும் போது விருதாவாக அரட்டை பேசவோ, வையவோ கெட்ட விஷயங்களை ‘டிஸ்கஸ்’ பண்ணவோ மாட்டோம். கர சரணாதிகள் அவளால் தான் வேலை செய்கின்றன என்ற பிரக்ஞை இருக்கும்போது தப்புக் கார்யம் பண்ணவே மாட்டோம். இப்படி ஆனால், போக போகப் அவள்தான் எல்லாம் செய்விக்கிறாள் என்பதில், சரீரக் கார்யம் மாத்திரமில்லாமல் நாம் மனஸினால் எண்ணுவது, ப்ளான் போடுவது முதலான செயல்கள் எல்லாங்கூட நாம் பண்ணுகிறோம், பண்ணவேண்டும் என்றில்லாமல் அவள் பண்ணுவிக்கிறபடி ஆகட்டும் என்று விட்டுவிடத் தோன்றும். முடிவாகப் பார்த்தால், மனஸினால்தான் மாயா விகாரங்கள், ஸம்ஸார பாதை முழுதும் உண்டாயிருக்கின்றன. அதை ஞானமார்க்கத்தில் சொன்னபடி மனோ நாசம் என்று பண்ணுவது முடியாமலிருக்கிறது. அதனால் இப்படி பக்தியிலே அம்மாவிடம் அதை ஒப்புக் கொடுத்து விட்டாலே போதும், அதன் பாதிப்பு போய் விடுகிறது. அதற்கப்புறம் நம்மைப் பேசிக்கொண்டும், கார்யம் பண்ணிக் கொண்டும், ஸஞ்சாரம் பண்ணிக் கொண்டு இருக்கும்படியாக அவள் வைத்தாலும் சரி, அல்லது இதெல்லாம் இல்லாமல் வைத்தாலும் சரி, இரண்டிலும் நாம் உள்ளுக்குள்ளே ஒரே மாதிரிப் பிரசாந்தமாகவே இருப்போம். அந்த நிலைக்குப் பிரார்த்திக்கும் படியாகத்தான் இந்த ச்லோகத்தை ஆசார்யாள் அநுக்ரஹித்திருக்கிறார்.

ஜபோ ஜல்ப:”ஜல்ப:” என்றால் பேச்சு. உளறிக் கொட்டுவது உள்பட எல்லாம் ‘ஜல்பம்’தான். இந்த ஜல்பமே ஜபமாக இருக்கிற நிலை அது. “நான் பேசுவதெல்லாம் உன் ஜபமாயிருக்கட்டும்!’

பாலா, பஞ்சதசீ, ஷோடசீ என்று உன் மந்திரங்களாகச் சிலதை எடுத்துக் கொண்டு ஜபக்கிறது போய் – முதலில் இதெல்லாம் அவசியம்தான்; தப்புத் தண்டாப் பேச்சிலிருந்து நம்மைத் திருப்ப ஜபம் முதலியவை வேண்டுந்தான்; ஆனாலும் கடைசியில் தனியாக ஜபிப்பது என்ற ஒன்று போய் – நான் பேசுகிறதெல்லாம் உன் ஜபம் என்ற ப்ரக்ஞை ஏற்படட்டும்”

ஸகலம் சில்பம் அபி முத்ரா விரசநா– “நான் கையில் செய்கிற ஸகல காரியமும் உன் பூஜையில் பிடிக்கிற ஹஸ்த முத்திரைகளாகட்டும்”. “முத்ரா விரசநா”– ‘முத்ரை பிடிப்பது’. ‘அது என்னுடைய எல்லா சில்பமுமேயாகட்டும்.’சில்பம் என்றால் பொதுவாக எல்லாத் தொழிலுந்தான். தமிழில் அது சிற்பத்தொழில் என்கிற ‘Sculpture’ மட்டுமாகி விட்டது. இதில்தானே பிரம்மா ஸ்ருஷ்டிக்கிற மாதிரி மநுஷ்யனும் ரூபங்களைத் தானாகப் படைக்கிறான்?’ அதனால் போலிருக்கிறது.

“தனியாக உள் கோயில் என்று ஒரு இடத்தைத் தேடி ப்ரதக்ஷிணம் பண்ணுவது என்றில்லாமல் ‘கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமணம்’: நான் நடக்கிற நடையெல்லாம் க்ரமமாக உன்னை ப்ரதக்ஷிணம் செய்வதாக – உன்னை வலம் வருவதாக – இருக்கட்டும். நான் எங்கே ஸஞ்சாரம் பண்ணினாலும் உன்னைத்தான் சுற்றி வருகிறேன் என்ற எண்ணம் இருக்கட்டும். சாப்பிடுகிறேன் அல்லவா? அந்தச் சாப்பாடு’………‘அசனாதி’ என்றால் ‘அசனம் முதலியன’ என்று அர்த்தம்; உணவு. ‘அசனம்’ என்றால் உணவு. ‘அசனம்’ என்று மட்டும் சொல்லாமல் ‘அசனாதி’ அதாவது உணவு முதலியவை என்கிறார். இதனால் வாயால் சாப்பிடுவது போல, கண்ணால் சாப்பிடுவதான பேச்சு பாட்டு முதலியன, தேஹத்தால் சாப்பிடுவதான ஸ்பரிசானந்த விஷயங்கள் முதலிய எல்லா இந்திரிய அநுபவங்களையும் குறிப்பிட்டதாகிறது. “இந்தச் ‘சாப்பாடு’கள் யாவும் – ஆஹுதி விதி:’ – உனக்கு ஹோமத்தில் ஆஹுதி கொடுக்கிற முறையாக ஆகட்டும்.”

சாதம் சாப்பிடுவதை நமக்குள் உள்ள பஞ்சப் பிராணன்களுக்கு ஆஹுதியாகக் கொடுத்துவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். கீதையிலும் பகவான், தானே பிராணிகளின் தேஹத்தில், வயிற்றில், வைச்வாநரன் என்ற ஜாடராக்னியாக இருந்துகொண்டு ஆஹாரத்தை ஜெரிப்பதாகச் சொல்கிறார். அவர் உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்ற உணர்ச்சி வந்தால் தப்பு வஸ்துக்களை, வெங்காயம், மதுபானம், மாம்ஸம் முதலியவற்றை உள்ளே போடத் தோன்றுமா? இப்படியே கண்ணும், காதும், மூக்கும், சர்மமும் அவரால்தான் அநுபோகம் பண்ண முடிகிறது என்னும்போது இவற்றைக் கெட்டதுகளில் செலுத்தத் தோன்றுமா?

‘ஸம்வேச:’– படுத்துக் கொள்கிறேனே, அது ‘ப்ரணாம:’ -உனக்குப் பண்ணும் நமஸ்காரமாக இருக்கட்டும். படுக்கும்போது அம்பாள் பாதத்தில் கிடக்கிறோம் என்று நினைத்துக் கொண்டுவிட்டால் எத்தனை சாந்தமாக நாள் முடியும்?அப்படி ஆகட்டும்.

‘லிஸ்டை நீட்டிக்கொண்டே போவானேன்? சுருக்கமாகச் சொன்னால், ஸாதனை என்று தனியாக, கஷ்டமாக  நான் முயற்சி பண்ணி ஜப  ஹோமாதிகள், தியானாதிகள், பிரதக்ஷிண நமஸ்காராதிகள் செய்வது என்றில்லாமல் நான் பாட்டுக்கு ஸெளக்யமாக எதையோ பண்ணிக் கொண்டிருந்தாலும், எதைப் பண்ணிக் கொண்டிருந்தாலும், —

ஸுகம்அகிலம் ……..யந்மேவிலஸிதம்– ‘ஸுகமாக நான் பண்ணிக் கொண்டிருக்கும் ஸகல காரியமும்’ என்று அர்த்தம் – என்னுடைய எல்லாச் செயலும்,

தவஸபர்யாபர்யாய: பவது– ‘உன்னுடைய பூஜைக் கிரமமாக ஆகட்டும்’. ‘நான் பண்ணுகிற செயல்கள் அத்தனையும் உன் பூஜையாக இருக்கட்டும்.’

‘ஸபர்யா’ என்றால் பூஜை. பர்யாயம் என்பதற்குப் பல அர்த்தங்கள் இருப்பதில் ஒன்று ‘மறு பெயர்’, ‘Substitute’ என்பது. “உனக்குப் பண்ணும் பூஜைக்கு மறுபெயராக அதனிடத்தைப் பெறும் ஸப்டிட்யூட்டாக என் ஸகல கார்யமுமே ஆகிவிடட்டும்!” “ஸபர்யா பர்யாய” என்று ஒரே சப்தங்களைத் திருப்பும் போது ‘யமகம்’ என்கிற சொல்லணியைக் கையாண்டிருக்கிறார்.

‘ஸுகம்’– ஸுகமாக, ஸெளக்யமாக, strain இல்லாமல், natural- ஆக – இப்படிச் சொன்னதில் நிரம்பவும் அர்த்த புஷ்டி இருக்கிறது. இப்போது மனஸ் கட்டுப்படாததால் அதை ‘மொராலிடி’யில் (தர்மமான நடத்தையில்) கொண்டு வருவது ரொம்ப strain ஆக இருக்கிறது. “எல்லாம் உன்னுடைய செயலே”என்று தாயுமானவர் சொன்னாற்போல, செய்விப்பது அனைத்தும் அம்பாளே என்ற நினைப்பை வளர்த்துக்கொண்டு மனஸை அவளிடம் கொடுத்தாலோ மொராலிடி என்பது நாம் ரொம்பவும் முயற்சி பண்ணி உண்டாக்கிக் கொள்ள வேண்டிய ஒழுங்கு முறையாகக் கஷ்டப்படுத்தாமல் ஸ்வாபாவிகமாக, ‘நாச்சுரலா’கக் கைகூடிவிடும். இயற்கைப்படி இருப்பதுதானே ஸெளக்யம்? இப்போதும் கர்மாக்களங்கம் பிடித்த மனஸின் இயற்கை ஸெளக்யமாக இருப்பதால்தான் அதன்படி அலைகிறோம். ஆனாலும் இந்த ஸெளக்யம் தாற்காலிகமாகத்தான் இருக்கிறது; சாச்வத ஸெளக்யத்தைத் தடுக்கிறது. அப்போது – அம்பாளிடம் ஸர்வஸங்க பரித்தியாகம் பண்ணும்போது நிஷ்களங்கமான சுத்த மனஸுக்கு எது இயற்கையோ அந்த தர்மான நடவடிக்கைகளே நமக்குத் தானாக வந்து சாச்வத ஸெளக்யங்களைக் கொடுக்கிறது. மொராலிடி என்று ஒன்று தெரிந்தது, அந்தப்படி நாம் நடக்கிறோம் என்றுகூட புத்தி பூர்வமாக நமக்குப் புரியாமலே வருகிற நிலை!

பாகவதத்தில் ஒன்பது தினுஸான பக்தி வகைகளின் உச்சியில் எதை வைத்திருக்கிறதோ அந்த “ஆத்ம நிவேதன”த்தைத் தான் – கீதையின் முடிவில் பகவான் சொன்ன பரிபூர்ண சரணாகதியைத்தான் – இந்த ச்லோகத்தில் ஆசாரியாள் சொல்லியிருக்கிறார்.

‘ஆத்மார்பண த்ருசா’ என்று ஒரு வார்த்தை நடுவிலே போட்டிருக்கிறாரே, ‘ஸுகமகிலம் ஆத்மார்பண த்ருசா’ என்ற இடத்தில், அதுதான் இந்த ஆத்ம நிவேதனத்தை, பரிபூர்ண சரணாகதியைத் தெரிவிப்பது. இந்த ச்லோகத்திற்கு அதுதான் உயிர் நிலை. இந்த ச்லோகத்திற்கு மாத்திரமில்லை; ஸகல ஸமய சாஸ்திரங்களுக்கும் அதுதான் உயிர் நிலை. உயிருக்கே அதுதான் உயிர்நிலை!  ‘ஆத்மார்பண த்ருஷா’ என்றால் இந்த உயிரை அப்படியே அம்பாளுக்கு ஸமர்ப்பணம் பண்ணிவிடும் பாவனையால்’ என்று அர்த்தம். அந்த பாவனை இருந்தால்தான் பேச்செல்லாம் ஜபமாயும், செயலெல்லாம் அப்படியப்படியாயும், இன்னும் பாக்கி சொன்னதெல்லாம் அப்படியப்படியாயும் ஆகும். ‘ஆத்ம ஸமர்ப்பண புத்தியால் இப்படியெல்லாம் ஆகட்டும்’என்பதற்குத்தான் பின்னாடி ‘பவது’ என்று போட்டிருக்கிறார். ஆத்ம ஸமர்ப்பணக்காரன், நிஜமான சரணாகதன் எப்படி இருப்பான் என்று ச்லோகத்தில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அங்கே வாழ்க்கை முழுக்கவே பூஜையாகிவிட்டதை – ‘ஸபர்யா பர்யாய’மாக ‘விலஸி’ப்பதை – பார்க்கிறோம்.

இதே ரீதியில் இதே அபிப்ராயங்களை, ஏறக்குறைய இதே வார்த்தைகளில் “சிவ மாநஸ பூஜா ஸ்தோத்திர”த்திலும் ஒரு ச்லோகமாக ஆசார்யாள் அநுக்ரஹித்திருக்கிறார்.

ஆத்மா த்வம் கிரிஜா மதி: ஸஹசரா: ப்ராணா; ஸரீரம் க்றுஹம்
பூஜா தே விஷயோப போக-ரசனா னித்ரா ஸமாதிஸ்திதி: |
ஸஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வா கிரோ
யத்யத்கர்ம கரோமி தத்ததகிலம் ஸம்போ தவாராதனம் ||

இப்படி ஸகலத்தையும் தனக்கு அர்ப்பணம் பண்ணும்படி பகவானே கீதையில் சொல்கிறார். “எதைச் செய்தாலும் எதைத் தின்றாலும் எதை ஹோமமோ தானமோ செய்தாலும், எந்தத் தபஸ் பண்ணினாலும் (எதிலே concentrate பண்ணினாலும் என்று அர்த்தம். எந்த விஷயத்தையும் தீவிரமான ஈடுபாட்டோடு பண்ணினால் அது தபஸ்தான்) அதையெல்லாம் எனக்கு அர்ப்பணம் செய்’ என்கிறார்.

யத்கரோஷியத்அச்நாஸியத்ஜுஹோஷிததாஸியத் |
யத்தபஸ்யஸிகௌந்தேயதத்குருஷ்வமத்அர்பணம் ||

‘என் செயலாவது யாது ஒன்றுமில்லை’, ‘நன்றே செய்வாய், பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே?’ என்றெல்லாம் நால்வர், ஆழ்வார்கள், இன்னம் மதாந்தரங்களில் உள்ள பெரியவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட பரிபூர்ண சரணாகதியை சொல்லியிருக்கிறார்கள். பிறவியின் தலையாய பயனான ஜீவன் முக்தியைத் தருவது அதுதான்.

ஞானத்தில் போனால் ‘மனோ நாசம்’ என்பதுதான் பக்தியில் போகிறபோது ‘சரணாகதி’ ஆகிறது. இரண்டும் ஆத்மார்ப்பணந்தான். இரண்டிற்கும் ஒரே பலன்: உயிருள்ளபோதே மோக்ஷானந்தம் பெறுவதான ஜீவன் முக்தி.

(அடுத்த பதிவிலிருந்து பூஜை, பாராயணம், ஜப முறைகளையும், ஆகம விதிப்படி அல்லது அவைகளுக்கு விதிக்கப்பட்ட முறைகளின்படி செய்வதையும் அதன் பலன்களையும் விரிவாக பார்ப்போம்)

சுபம்