Tag Archives: Sarva Samarpanam

ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | லலிதா ஸஹஸ்ரநாமம் | Sri Lalitha Sahasranamam

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

தேவி லலிதாம்பிகை

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்

எனது அன்பர்கள் சிலர், நீங்கள் வலைப்பூவில் இட்ட முறையில், பெண்கள் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயணம் செய்யலாமா? என, வினா எழுப்பியுள்ளனர். இது அவர்களுக்காக!

துல்லியமாக மனக் குவிப்பு இருக்கும் நிலையில் – அந்த முழு கவனம் வைத்து இருக்கும் நிலையில் – கண் எதிரே அம்மன் அமர்ந்து இருக்க – அவளை துதித்து வணங்கப்படும் சக்தி வாய்ந்த – இந்த லலிதா சஹஸ்ரநாமம் – அவளை உங்கள் நேரில் கூட வரவழைத்து விடும்.

உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற, உங்களை தகுதி படைத்தவராக ஆக்கும். அதை நோக்கி நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றி பெரும்… மனத்தை ஒருமுகப் படுத்துவதன் மகத்தான பலன் அது…!

ஸ்ரீ ருத்ரமோ, விஷ்ணு சஹஸ்ரநாமமோ அல்லது லலிதா சஹஸ்ரநாமமோ முழுவதும் கற்று, மனதுக்குள் ஜெபிக்க தொடங்குவோம்…. இறைவனை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே, மனதுக்குள் இதை ஜெபிக்க ஆரம்பித்தால் – அட அடா..! நினைத்துப் பார்க்கவே சிலிர்க்கிறது

எண்ணற்ற மகான்களால் புனிதமடைந்த பாரத பூமியில், ’ஆன்மாவிற்கு ஆண், பெண் பேதம் என்பது கிடையாது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இறைவனை அடைவதற்கு அது ஒருதடையாக இருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ சக்கரத்தம்மாள். தியாகமும், யோகமும் இணைந்த ஒன்றாக அவரது வரலாறு விளங்குகிறது.

ஸ்ரீ சக்கரத்தம்மாளின் இயற்பெயர் அனந்தாம்பாள். பொது சகாப்தம் 1854ம் ஆண்டில், வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற சிற்றூரில் பிறந்தார். தந்தை ஆலய அர்ச்சகர். தேவி உபாசனையில் தேர்ந்தவர். தாயாரோ அனுதினமும் சிவனைத் தவறாது பூஜித்து வந்தவர். இவர்களது குழந்தை என்பதால் சிறுவயதிலேயே அதற்கு இறை அனுபூதி வாய்த்திருந்தது. குழந்தை ஞானச் செறிவுடன் வளர்ந்து வரும் வேலையில் திடீரென்று தாயார் காலமானார். தந்தை அக்கால வழக்கப்படி மறுமணம் செய்து கொண்டார். சிற்றன்னையின் கவனிப்பில் குழந்தை வளர்ந்தது.

லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீஸ்துதி போன்றவற்றை தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டு தினமும் ஓதி வந்தாள் சிறுமி அனந்தாம்பாள். கோயிலின் மேல்நிலைக்குச் சென்று தனியாக அமர்ந்து தியானம் செய்வது அவளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. சக குழந்தைகளுடன் விளையாடுவதை விட, தந்தையுடன் சென்று ஆலயப் பணிகளில் ஈடுபடுவதே அவளுக்குப் பிடித்திருந்தது.

திடீரென சிறுமிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்த கோமளீஸ்வரர் மடத்தின் அதிபதியான சாம்பசிவனுடன் திருமணம் நடந்தது. அப்போது அனந்தாம்பாளுக்கு வயது எட்டு. சாம்பசிவனுக்கோ இருபத்துமூன்று. அவருக்கு அது இரண்டாவது திருமணமும் கூட. பால்ய விவாகம் சகஜமாக இருந்ததால் அக்காலத்தில் திருமணத்திற்கு எதிர்ப்புகள் ஏதும் இல்லை.

மணமாகிச் சென்னைக்கு வந்தாள் அனந்தாம்பாள். சிறுமியான அவள் திருமண வாழ்க்கை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. நாளடைவில் தன் பொறுப்புக்களையும், கடமைகளையும் உணர்ந்து அதற்கேற்றவாறு நடந்து கொண்டாள். ஆனால் கணவன் சாம்பசிவனோ, மனைவி ஒரு சிறுமி என்பதால் மதிக்காமல் தன் இஷ்டம்போல் வாழ்க்கை நடத்தினார். அவர் தீய நடத்தை உடையவராகவும் இருந்தார். அனந்தாம்பாளுக்குத் திருமண வாழ்க்கை ஒரு கொடிய நரக வாழ்க்கையாக அமைந்தது.

அனந்தாம்பாள் வளர்ந்தார். குமரியானார். ஆனால் அப்போதும் சாம்பசிவன் தனது தீய நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. அனந்தாம்பாளை உளரீதியாகப் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கினார். மிகக் கொடிய துன்பத்தை அவர் அனுபவிக்க நேர்ந்தது. ஆனாலும் தனது இல்லறக் கடமைகளைக் கைவிடவில்லை.

அதேசமயம் அவரது ஆன்மீக நாட்டம் நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் இருந்தது. தினந்தோறும் அருகில் உள்ள கோமளீஸ்வரர் கோயிலுக்குச் செல்வார். தியானத்தில் ஈடுபடுவார். லலிதா சகஸ்ரநாமம் சொல்லுவார். இறைவனை வேண்டி, உளம் உருக வழிபட்டு வருவார்.

நாளடைவில் தீயசெயல்களின் விளைவால் படுத்த படுக்கையானார் சாம்பசிவன். அப்போதும் அவருக்கான கடமைகளைச் செய்து வந்ததுடன், தினம்தோறும் ஆலயம் சென்று கணவருக்காகப் பிரார்த்தித்து வரலானார் அனந்தாம்பாள்.

ஒருநாள் கணவர் இறந்து விட்டார். அனந்தாம்பாளுக்கு மொட்டை அடிக்கப்பட்டதுடன், காவி வஸ்திரமும் அணிவிக்கப்பட்டது. அதுமுதல் யாருடனும் எதுவும் பேசாமல், தன் வீட்டின் மொட்டை மாடியில் தனித்தமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 20.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள், தன் முப்பதாவது வயது வரையில், அவரது அந்த மௌனத் தவம் தொடர்ந்தது. தவத்தின் முடிவில் அந்த ஒளிக்கெல்லாம் ஒளியான பேரொளியைக் கண்டார் அம்மா.

அதுமுதல் சதா ஆனந்த நிலையில் இருப்பதே அவர் வழக்கமாயிற்று. ’யான் எனதென்பது அறியேன், பகலிரவாவது அறியேன்’ என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்ததுடன், பரிபூரண ஆனந்த பிரம்ம நிலையிலேயே திளைத்திருந்தார். சதா ஆனந்த நிலையில் இருப்பதால் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பது அவர் வழக்கமானது.

கோமளீசுவரன் ஆலய வாசலில் அமர்ந்திருப்பார். யாரைப் பார்த்தாலும் பெருங்குரலெடுத்துச் சிரிப்பார். அவரைக் கண்ட பலரும் ஆரம்பத்தில் பைத்தியம் என்று கருதி விலகிச் சென்றனர்.

பின்னரே அவர் ’ஞான சொருபிணி’ என்பதும், ’பிரம்ம யோகினி’ என்பதும் தெரிய வந்தது. அம்மாவின் ஞான நிலையை உணர்ந்த சண்முக முதலியார் என்பவர் முதல் சீடரானார். தொடர்ந்து பலரும் அம்மாவை நாடி வந்து வணங்க ஆரம்பித்தனர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவராக விளங்கியவர் டாக்டர் நஞ்சுண்டராவ்.

டாக்டர் நஞ்சுண்டராவ், சென்ற நூற்றாண்டின் பிரபலமான மருத்துவர்களுள் ஒருவர். கர்னல் ஆல்காட், கிருஷ்ணசுவாமி அய்யர், பி. ஆர். சுந்தரமையர், காட்டுப் புத்தூர் ஜமீன்தார் என பலருக்கும் அவர்தான் குடும்ப டாக்டர். சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமானவர்.

விவேகானந்தர், நஞ்சுண்டராவின் ஆன்மீக வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அமெரிக்காவிலிருந்தும் மற்ற வெளிநாடுகளிலிருந்தும் விவேகானந்தர் நஞ்சுண்டராவிற்கு எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ்பெற்றவை. “எனக்கு சென்னையைப் பற்றி மிகப் பெரிய நம்பிக்கை உள்ளது. சென்னையிலிருந்து ஒரு மிகப்பெரிய ஆன்மீக அலை உருவாகப் போகிறது. அது இந்தியாவெங்கும் பரவி ஒளி வீசப் போகிறது. இதில் எனக்கு பெருத்த நம்பிக்கை இருக்கிறது” என்று டாக்டர் நஞ்சுண்டராவுக்கு எழுதிய கடிதத்தில்தான் விவேகானந்தர் தெரிவித்திருந்தார்.

ஆன்மீகத்தில் அளவற்ற நாட்டம் கொண்டிருந்த நஞ்சுண்டராவின் உள்ளம் ஒரு நல்ல குருவைத் தேடிக் கொண்டிருந்தது. அந்நிலையில் தான் அவருக்கு அம்மாவின் தரிசனம் கிடைத்தது. அம்மாவை ஆரம்பத்தில் ஒரு சாதாரணப் பெண்மணியாகவே அவர் கருதினார். பின்னரே அவரது தவநிலையை உணர்ந்து கொண்டு அம்மாவின் சீடரானார். அம்மாவைத் தங்கள் குடும்பத்துள் ஒருவராகவே கருதியவர் அவருடன் காசி உட்பட பல இடங்களுக்கும் தல யாத்திரை சென்று வந்தார்.

பின் அம்மாவுடன் திருவண்ணாமலை சென்ற டாக்டர் நஞ்சுண்ட ராவ், அப்போது விருபாக்ஷி குகையில் தங்கியிருந்த பகவான் ரமணரையும் தரிசித்து ஆசி பெற்றார். (தேவராஜ முதலியாரின் ‘அனுதினமும் பகவானுடன்’ / 17-03-1946 நாட்குறிப்பு). அம்மா அனுதினமும் சிவ பூஜையும் ஸ்ரீ சக்ர பூஜையும் செய்து வந்தார். அதனால் அவரது இயற்பெயரான அனந்தாம்பாள் என்பது மறைந்து ’அம்மா’ என்றும் சக்கரத்தம்மாள் என்றும் அன்புடன் அழைக்கப்படலானார்.

தம்மை நாடி வந்தவர்களுக்கு அன்பு, அடக்கம், கருணை, இரக்கம், பக்தி ஆகியவற்றை உபதேசித்தார். “பிரம்மம் ஒன்றே சத்தியம். அந்த பிரம்மத்தை உணர்வதே ஆனந்தம். எல்லாம் அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரபிரம்மத்தின் ஸ்வரூபமே. நமக்கு அந்நியமாய் எதுவுமே இல்லை. எல்லாம் இறைவனே! அவனே நம்மை ஆட்டுவிக்கிறான். பக்தியுடன் அவன் தாள் பணிவதே மனிதப் பிறவியின் பயன்பாடு” என்றெல்லாம் அவர் உபதேசித்ததைக் கேட்ட மக்கள் பலரும் அவரை நாடி வந்து பணிந்தனர்.

பரிபூரண ஞானநிலை அடைந்த அம்மா, அவ்வப்பொழுது நீடித்த யோக சமாதியில் ஆழ்ந்து விடுவதும் உண்டு. அன்பர்கள் காரணம் கேட்டால், தாம் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷிளோடு உரையாடி விட்டு வந்ததாகவும், சேஷாத்ரி சுவாமிகளை தரிசனம் செய்து விட்டு வந்ததாகவும் கூறுவார். அது தவிரப் பல்வேறு சித்துக்களும் அம்மா கைவரப் பெற்றிருந்தார்.

அம்மாவின் சித்தாற்றல் பற்றி தனது ’உள்ளொளி’ (மணிவாசகர் பதிப்பகம், தமிழ் மண் பதிப்பகம்) என்ற நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.

“சென்னை கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல்மாடியில் பறந்துவந்து நின்றனர். மானுடம் பறக்கிறதெனில் உலகம் அதை எப்படி வியக்குமென்று சொல்ல வேண்டுவதில்லை. அக்காலத்தில் சென்னையில் வதிந்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர். அப்பொழுது சென்னை மியூஸியத் தலைவராயிருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தைச் சேர்ந்தவரென்றும், அவரிடம் பறவைக்குரிய கருவி கரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் (Evolution) அறப்படி அத்தகையப் பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டன. அவர் விளக்கம் மற்றவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. யான் ‘தேசபக்தன்’ ஆசிரியனாகியபோது டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. பறவையாரைப் பற்றி அவரை நான் விசாரித்தேன். அவர், ‘அம்மையார் சித்தரினத்தில் சேர்ந்தவர்’ என்று கூறினர். பறவை நாயகியார் நிலை மனோதத்துவத்துக்கு எட்டுவதா? உன்னிப் பாருங்கள்”.

பரிபக்குவம் பெற்ற ஞானிகள், சித்தர்கள் இருந்த இடத்திலிருந்தே அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியும். அந்த வகையில் தான் பெற்ற ‘இலகிமா’ என்ற சித்தின் மூலம், தனது உடல் எடையைக் காற்றை விட எடைகுறைந்ததாய் மாற்றிக் கொண்டு, வானத்தில் பறந்திருக்கிறார் அம்மா என்றே நாம் அனுமானிக்க முடிகிறது.

ஞானிகளாகவும், மகான்களாகவும் இருப்பவர்கள் காலம், இடம், தூரம் போன்ற எல்லா எல்லைகளையும், நான், எனது போன்ற குறுகிய நோக்கங்களையும் கடந்தவர்கள். எல்லாம் பிரம்மத்தின் சொரூபமே; எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் அவர்கள். ஆனால் அப்படிப்பட்ட மகான்களின் ஆற்றல்களையும், அருள் உபதேசங்களையும் புரிந்து கொள்ள இயலாதவர்கள் அவற்றைப் பொய் என்றும், மூட நம்பிக்கை என்றும் புறந்தள்ளி விடுகின்றனர்.

பகுத்தறிவால் நம்ப முடியாத எதுவும், விஞ்ஞான அளவுகோலுக்கு மாறான எதுவும் கற்பனையானதாகவும், நம்ப முடியாத ஒன்றாகவும் கருதப்படுகிறது. ஆனால் தனது அறிவிற்கு அப்பாற்பட்ட எதுவுமே இருக்க முடியாது என்று எண்ணுவதே உண்மையில் அறியாமையும் மூடநம்பிக்கையுமாகும். ’தான், தனது’ என்ற அகந்தை இருக்கும்வரை மெய்ஞ்ஞானம் சித்திக்காது. உண்மையை அறிந்து கொள்ளவும் இயலாது.

இவ்வாறு பல்வேறு ஆற்றல்கள் பெற்றிருந்த அம்மா, 1901ம் ஆண்டு, பிப்ரவரி 28ம் நாள், இறை ஜோதியில் ஐக்கியமானார். சீடர் நஞ்சுண்டராவால் சென்னை திருவான்மியூரில், கலாக்ஷேத்ரா அருகே அம்மாவுக்கு ஓர் அழகிய சமாதி ஆலயம் எழுப்பப்பட்டது.

ஒருமுறை தம்மைச் சந்தித்த நஞ்சுண்டராவிடம் காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள், அம்மாவின் சமாதி ஆலயம் ஒரு மகத்தான் சக்தி பீடம் என்றும், தவறாமல் பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ———— நன்றி : திரு . பி. எஸ். ரமணன்

திரு.வி.க பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சாதாரணமாக நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் உலகில், அமானுஷ்யமும் கலந்து இருக்கிறது. இதை உணர்ந்து கொள்ள நமக்குத் தான் நேரம் இல்லை…

இறைவன் இருப்பது சர்வ நிச்சயமான உண்மை. கேட்பதை தெளிவாக உறுதியுடன் கேளுங்கள்… விரைவில் கை கூடும்..!

சுபம்

ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | ஸர்வ ஸமர்ப்பணம் | Sarva Samarppanam

ஸர்வ ஸமர்ப்பணம் | Sarva Samarppanam

மஹா பெரியவா

சரீரம், ஆத்மா எல்லாவற்றையும் அம்பாள் ஈச்வரார்ப்பணம் பண்ணுவது பற்றி நடுவாந்தரத்தில் பேச்சு வந்தது. இந்த விஷயத்தையே அம்பாளிடம் நம்மை அர்ப்பித்துக் கொள்வதாக

ஜபோ ஜல்ப:சில்பம் ஸகலம் அபி முத்ரா விரசநா
கதி ப்ராதக்ஷிண்ய – க்ரமணம் அசனாத்- யாஹதி விதி:
ப்ரணாம:ஸம்வேச:ஸுகம் அகிலம் ஆத்மார்பண- த்ருசா
ஸ்பர்யா-பர்யாய: தவ பவது யந்-மே விலஸிதம்||  – என்ற (27வது) ச்லோகத்தில் விளக்கமாகச் சொல்கிறார்.

நாம் பண்ணுகிற ஸகல காரியமும் அம்பாளுக்கு அர்ப்பணமாகி விடவேண்டும் என்பது சுருக்கமாக இதன் தாத்பர்யம். பூஜை, ஜபம், அதிலே கைவிரல்களால் முத்ரை காட்டுவது, பிரதக்ஷிண நமஸ்காரம், தேவி மந்த்ரங்களால் சண்டி ஹோமம் போன்றவற்றில் ஆஹுதிகளைக் கொடுப்பது என்று அம்பாள் பரமாக அநேக காரியங்களை உபாஸகர்கள் பண்ணுகிறார்களல்லவா? இவை எல்லாம் பண்ண வேண்டியதுதான். ஆனாலும் இந்த பூஜை, ஜபம், ஹோமம் முதலியவை அததைக் கொஞ்ச காலம் பண்ணுவதோடு முடிந்து போவதாகவும், அப்புறம் தன் பாட்டுக்கு லௌகீக பிரவிருத்திகளிலே ஈடுபட்டு இந்திரிய ஸுகங்களைத் தேடிக் கொள்வதாகவும் இருக்கிற நிலைமை மாற வேண்டும். கொஞ்சம் வேளை அம்பாள், மிச்சம் வேளை ஸம்ஸாரம் என்றில்லாமல் ஸதா காலமும் அவள் பூஜையாக, ஜபமாக ஹோமமாக இருக்கும்படிப் பண்ணிக் கொள்ள வேண்டும். உபாஸகர்கள் என்பவர் மட்டுமில்லாமல் எல்லாருமே இப்படிச் செய்யவேண்டும்.

“அதெப்படி எப்போதும் இவற்றைப் பண்ண முடியும்? குளிக்க வேண்டாமா? சாப்பிட வேண்டாமா? தூங்க வேண்டாமா? லோக வாழ்விலே நாலு பேரிடம் பிரியமாகப் பேச வேண்டாமா? நல்லது சொல்ல வேண்டாமா? நாலு இடத்துக்கு ப் போக வேண்டாமா? கையை காலை அசைத்து ஏதோ பரோபகாரமாக காரியம் பண்ண வேண்டாமா? மஹா ஞானிகளாக இருக்கப்பட்டவர்களிடங்கூட இவையெல்லாம் இருக்கத்தானே செய்கிறது.”

ஆமாம். இதெல்லாம் இருக்கட்டும். அவள் லீலையில் இருந்துதான் ஆகவேண்டும். ஆனால் அந்த ஞானிகள் எப்படி இதையெல்லாம் லீலை என்று தெரிந்துகொண்டு பண்ணியும் பண்ணாமலிருக்கிறார்களோ, அப்படி நீயும் ஆகப் பாரு. இப்போதே அப்படி இருப்பதென்றால் முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக யத்தனம் செய்து, அப்யாஸத்தால் அந்த நிலைக்கு வா. இப்போதைக்கு குளிப்பது, சாப்பிடுவது, பேசுவது, தூங்குவது, நடப்பது மற்ற வேலை செய்வது எல்லாமே அவளுடைய சக்தியால் நடக்கிறது – நாமாக ஒன்றும் பண்ண முடியாது என்ற நினைப்பை அப்பப்போ உண்டாக்கிக் கொள்ளு. இந்த நினைப்பை விருத்தி பண்ணிக் கொண்டே போ. அம்பாள் கொடுத்த சக்தியால் சாப்பிடுகிறோம் என்று நினைக்கும் போது கெட்ட பதார்த்தங்களை உள்ளே தள்ளத் தோன்றாது. அம்பாள்தான் நடக்க சக்தி தருகிறாள் என்ற ஞாபகம் இருக்கும்போது ரேஸுக்கும், ஸினிமாவுக்கும் போகத் தோன்றாது. அவள் கொடுப்பது வாக்கு என்னும் போது விருதாவாக அரட்டை பேசவோ, வையவோ கெட்ட விஷயங்களை ‘டிஸ்கஸ்’ பண்ணவோ மாட்டோம். கர சரணாதிகள் அவளால் தான் வேலை செய்கின்றன என்ற பிரக்ஞை இருக்கும்போது தப்புக் கார்யம் பண்ணவே மாட்டோம். இப்படி ஆனால், போக போகப் அவள்தான் எல்லாம் செய்விக்கிறாள் என்பதில், சரீரக் கார்யம் மாத்திரமில்லாமல் நாம் மனஸினால் எண்ணுவது, ப்ளான் போடுவது முதலான செயல்கள் எல்லாங்கூட நாம் பண்ணுகிறோம், பண்ணவேண்டும் என்றில்லாமல் அவள் பண்ணுவிக்கிறபடி ஆகட்டும் என்று விட்டுவிடத் தோன்றும். முடிவாகப் பார்த்தால், மனஸினால்தான் மாயா விகாரங்கள், ஸம்ஸார பாதை முழுதும் உண்டாயிருக்கின்றன. அதை ஞானமார்க்கத்தில் சொன்னபடி மனோ நாசம் என்று பண்ணுவது முடியாமலிருக்கிறது. அதனால் இப்படி பக்தியிலே அம்மாவிடம் அதை ஒப்புக் கொடுத்து விட்டாலே போதும், அதன் பாதிப்பு போய் விடுகிறது. அதற்கப்புறம் நம்மைப் பேசிக்கொண்டும், கார்யம் பண்ணிக் கொண்டும், ஸஞ்சாரம் பண்ணிக் கொண்டு இருக்கும்படியாக அவள் வைத்தாலும் சரி, அல்லது இதெல்லாம் இல்லாமல் வைத்தாலும் சரி, இரண்டிலும் நாம் உள்ளுக்குள்ளே ஒரே மாதிரிப் பிரசாந்தமாகவே இருப்போம். அந்த நிலைக்குப் பிரார்த்திக்கும் படியாகத்தான் இந்த ச்லோகத்தை ஆசார்யாள் அநுக்ரஹித்திருக்கிறார்.

ஜபோ ஜல்ப:”ஜல்ப:” என்றால் பேச்சு. உளறிக் கொட்டுவது உள்பட எல்லாம் ‘ஜல்பம்’தான். இந்த ஜல்பமே ஜபமாக இருக்கிற நிலை அது. “நான் பேசுவதெல்லாம் உன் ஜபமாயிருக்கட்டும்!’

பாலா, பஞ்சதசீ, ஷோடசீ என்று உன் மந்திரங்களாகச் சிலதை எடுத்துக் கொண்டு ஜபக்கிறது போய் – முதலில் இதெல்லாம் அவசியம்தான்; தப்புத் தண்டாப் பேச்சிலிருந்து நம்மைத் திருப்ப ஜபம் முதலியவை வேண்டுந்தான்; ஆனாலும் கடைசியில் தனியாக ஜபிப்பது என்ற ஒன்று போய் – நான் பேசுகிறதெல்லாம் உன் ஜபம் என்ற ப்ரக்ஞை ஏற்படட்டும்”

ஸகலம் சில்பம் அபி முத்ரா விரசநா– “நான் கையில் செய்கிற ஸகல காரியமும் உன் பூஜையில் பிடிக்கிற ஹஸ்த முத்திரைகளாகட்டும்”. “முத்ரா விரசநா”– ‘முத்ரை பிடிப்பது’. ‘அது என்னுடைய எல்லா சில்பமுமேயாகட்டும்.’சில்பம் என்றால் பொதுவாக எல்லாத் தொழிலுந்தான். தமிழில் அது சிற்பத்தொழில் என்கிற ‘Sculpture’ மட்டுமாகி விட்டது. இதில்தானே பிரம்மா ஸ்ருஷ்டிக்கிற மாதிரி மநுஷ்யனும் ரூபங்களைத் தானாகப் படைக்கிறான்?’ அதனால் போலிருக்கிறது.

“தனியாக உள் கோயில் என்று ஒரு இடத்தைத் தேடி ப்ரதக்ஷிணம் பண்ணுவது என்றில்லாமல் ‘கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமணம்’: நான் நடக்கிற நடையெல்லாம் க்ரமமாக உன்னை ப்ரதக்ஷிணம் செய்வதாக – உன்னை வலம் வருவதாக – இருக்கட்டும். நான் எங்கே ஸஞ்சாரம் பண்ணினாலும் உன்னைத்தான் சுற்றி வருகிறேன் என்ற எண்ணம் இருக்கட்டும். சாப்பிடுகிறேன் அல்லவா? அந்தச் சாப்பாடு’………‘அசனாதி’ என்றால் ‘அசனம் முதலியன’ என்று அர்த்தம்; உணவு. ‘அசனம்’ என்றால் உணவு. ‘அசனம்’ என்று மட்டும் சொல்லாமல் ‘அசனாதி’ அதாவது உணவு முதலியவை என்கிறார். இதனால் வாயால் சாப்பிடுவது போல, கண்ணால் சாப்பிடுவதான பேச்சு பாட்டு முதலியன, தேஹத்தால் சாப்பிடுவதான ஸ்பரிசானந்த விஷயங்கள் முதலிய எல்லா இந்திரிய அநுபவங்களையும் குறிப்பிட்டதாகிறது. “இந்தச் ‘சாப்பாடு’கள் யாவும் – ஆஹுதி விதி:’ – உனக்கு ஹோமத்தில் ஆஹுதி கொடுக்கிற முறையாக ஆகட்டும்.”

சாதம் சாப்பிடுவதை நமக்குள் உள்ள பஞ்சப் பிராணன்களுக்கு ஆஹுதியாகக் கொடுத்துவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். கீதையிலும் பகவான், தானே பிராணிகளின் தேஹத்தில், வயிற்றில், வைச்வாநரன் என்ற ஜாடராக்னியாக இருந்துகொண்டு ஆஹாரத்தை ஜெரிப்பதாகச் சொல்கிறார். அவர் உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்ற உணர்ச்சி வந்தால் தப்பு வஸ்துக்களை, வெங்காயம், மதுபானம், மாம்ஸம் முதலியவற்றை உள்ளே போடத் தோன்றுமா? இப்படியே கண்ணும், காதும், மூக்கும், சர்மமும் அவரால்தான் அநுபோகம் பண்ண முடிகிறது என்னும்போது இவற்றைக் கெட்டதுகளில் செலுத்தத் தோன்றுமா?

‘ஸம்வேச:’– படுத்துக் கொள்கிறேனே, அது ‘ப்ரணாம:’ -உனக்குப் பண்ணும் நமஸ்காரமாக இருக்கட்டும். படுக்கும்போது அம்பாள் பாதத்தில் கிடக்கிறோம் என்று நினைத்துக் கொண்டுவிட்டால் எத்தனை சாந்தமாக நாள் முடியும்?அப்படி ஆகட்டும்.

‘லிஸ்டை நீட்டிக்கொண்டே போவானேன்? சுருக்கமாகச் சொன்னால், ஸாதனை என்று தனியாக, கஷ்டமாக  நான் முயற்சி பண்ணி ஜப  ஹோமாதிகள், தியானாதிகள், பிரதக்ஷிண நமஸ்காராதிகள் செய்வது என்றில்லாமல் நான் பாட்டுக்கு ஸெளக்யமாக எதையோ பண்ணிக் கொண்டிருந்தாலும், எதைப் பண்ணிக் கொண்டிருந்தாலும், —

ஸுகம்அகிலம் ……..யந்மேவிலஸிதம்– ‘ஸுகமாக நான் பண்ணிக் கொண்டிருக்கும் ஸகல காரியமும்’ என்று அர்த்தம் – என்னுடைய எல்லாச் செயலும்,

தவஸபர்யாபர்யாய: பவது– ‘உன்னுடைய பூஜைக் கிரமமாக ஆகட்டும்’. ‘நான் பண்ணுகிற செயல்கள் அத்தனையும் உன் பூஜையாக இருக்கட்டும்.’

‘ஸபர்யா’ என்றால் பூஜை. பர்யாயம் என்பதற்குப் பல அர்த்தங்கள் இருப்பதில் ஒன்று ‘மறு பெயர்’, ‘Substitute’ என்பது. “உனக்குப் பண்ணும் பூஜைக்கு மறுபெயராக அதனிடத்தைப் பெறும் ஸப்டிட்யூட்டாக என் ஸகல கார்யமுமே ஆகிவிடட்டும்!” “ஸபர்யா பர்யாய” என்று ஒரே சப்தங்களைத் திருப்பும் போது ‘யமகம்’ என்கிற சொல்லணியைக் கையாண்டிருக்கிறார்.

‘ஸுகம்’– ஸுகமாக, ஸெளக்யமாக, strain இல்லாமல், natural- ஆக – இப்படிச் சொன்னதில் நிரம்பவும் அர்த்த புஷ்டி இருக்கிறது. இப்போது மனஸ் கட்டுப்படாததால் அதை ‘மொராலிடி’யில் (தர்மமான நடத்தையில்) கொண்டு வருவது ரொம்ப strain ஆக இருக்கிறது. “எல்லாம் உன்னுடைய செயலே”என்று தாயுமானவர் சொன்னாற்போல, செய்விப்பது அனைத்தும் அம்பாளே என்ற நினைப்பை வளர்த்துக்கொண்டு மனஸை அவளிடம் கொடுத்தாலோ மொராலிடி என்பது நாம் ரொம்பவும் முயற்சி பண்ணி உண்டாக்கிக் கொள்ள வேண்டிய ஒழுங்கு முறையாகக் கஷ்டப்படுத்தாமல் ஸ்வாபாவிகமாக, ‘நாச்சுரலா’கக் கைகூடிவிடும். இயற்கைப்படி இருப்பதுதானே ஸெளக்யம்? இப்போதும் கர்மாக்களங்கம் பிடித்த மனஸின் இயற்கை ஸெளக்யமாக இருப்பதால்தான் அதன்படி அலைகிறோம். ஆனாலும் இந்த ஸெளக்யம் தாற்காலிகமாகத்தான் இருக்கிறது; சாச்வத ஸெளக்யத்தைத் தடுக்கிறது. அப்போது – அம்பாளிடம் ஸர்வஸங்க பரித்தியாகம் பண்ணும்போது நிஷ்களங்கமான சுத்த மனஸுக்கு எது இயற்கையோ அந்த தர்மான நடவடிக்கைகளே நமக்குத் தானாக வந்து சாச்வத ஸெளக்யங்களைக் கொடுக்கிறது. மொராலிடி என்று ஒன்று தெரிந்தது, அந்தப்படி நாம் நடக்கிறோம் என்றுகூட புத்தி பூர்வமாக நமக்குப் புரியாமலே வருகிற நிலை!

பாகவதத்தில் ஒன்பது தினுஸான பக்தி வகைகளின் உச்சியில் எதை வைத்திருக்கிறதோ அந்த “ஆத்ம நிவேதன”த்தைத் தான் – கீதையின் முடிவில் பகவான் சொன்ன பரிபூர்ண சரணாகதியைத்தான் – இந்த ச்லோகத்தில் ஆசாரியாள் சொல்லியிருக்கிறார்.

‘ஆத்மார்பண த்ருசா’ என்று ஒரு வார்த்தை நடுவிலே போட்டிருக்கிறாரே, ‘ஸுகமகிலம் ஆத்மார்பண த்ருசா’ என்ற இடத்தில், அதுதான் இந்த ஆத்ம நிவேதனத்தை, பரிபூர்ண சரணாகதியைத் தெரிவிப்பது. இந்த ச்லோகத்திற்கு அதுதான் உயிர் நிலை. இந்த ச்லோகத்திற்கு மாத்திரமில்லை; ஸகல ஸமய சாஸ்திரங்களுக்கும் அதுதான் உயிர் நிலை. உயிருக்கே அதுதான் உயிர்நிலை!  ‘ஆத்மார்பண த்ருஷா’ என்றால் இந்த உயிரை அப்படியே அம்பாளுக்கு ஸமர்ப்பணம் பண்ணிவிடும் பாவனையால்’ என்று அர்த்தம். அந்த பாவனை இருந்தால்தான் பேச்செல்லாம் ஜபமாயும், செயலெல்லாம் அப்படியப்படியாயும், இன்னும் பாக்கி சொன்னதெல்லாம் அப்படியப்படியாயும் ஆகும். ‘ஆத்ம ஸமர்ப்பண புத்தியால் இப்படியெல்லாம் ஆகட்டும்’என்பதற்குத்தான் பின்னாடி ‘பவது’ என்று போட்டிருக்கிறார். ஆத்ம ஸமர்ப்பணக்காரன், நிஜமான சரணாகதன் எப்படி இருப்பான் என்று ச்லோகத்தில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அங்கே வாழ்க்கை முழுக்கவே பூஜையாகிவிட்டதை – ‘ஸபர்யா பர்யாய’மாக ‘விலஸி’ப்பதை – பார்க்கிறோம்.

இதே ரீதியில் இதே அபிப்ராயங்களை, ஏறக்குறைய இதே வார்த்தைகளில் “சிவ மாநஸ பூஜா ஸ்தோத்திர”த்திலும் ஒரு ச்லோகமாக ஆசார்யாள் அநுக்ரஹித்திருக்கிறார்.

ஆத்மா த்வம் கிரிஜா மதி: ஸஹசரா: ப்ராணா; ஸரீரம் க்றுஹம்
பூஜா தே விஷயோப போக-ரசனா னித்ரா ஸமாதிஸ்திதி: |
ஸஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வா கிரோ
யத்யத்கர்ம கரோமி தத்ததகிலம் ஸம்போ தவாராதனம் ||

இப்படி ஸகலத்தையும் தனக்கு அர்ப்பணம் பண்ணும்படி பகவானே கீதையில் சொல்கிறார். “எதைச் செய்தாலும் எதைத் தின்றாலும் எதை ஹோமமோ தானமோ செய்தாலும், எந்தத் தபஸ் பண்ணினாலும் (எதிலே concentrate பண்ணினாலும் என்று அர்த்தம். எந்த விஷயத்தையும் தீவிரமான ஈடுபாட்டோடு பண்ணினால் அது தபஸ்தான்) அதையெல்லாம் எனக்கு அர்ப்பணம் செய்’ என்கிறார்.

யத்கரோஷியத்அச்நாஸியத்ஜுஹோஷிததாஸியத் |
யத்தபஸ்யஸிகௌந்தேயதத்குருஷ்வமத்அர்பணம் ||

‘என் செயலாவது யாது ஒன்றுமில்லை’, ‘நன்றே செய்வாய், பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே?’ என்றெல்லாம் நால்வர், ஆழ்வார்கள், இன்னம் மதாந்தரங்களில் உள்ள பெரியவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட பரிபூர்ண சரணாகதியை சொல்லியிருக்கிறார்கள். பிறவியின் தலையாய பயனான ஜீவன் முக்தியைத் தருவது அதுதான்.

ஞானத்தில் போனால் ‘மனோ நாசம்’ என்பதுதான் பக்தியில் போகிறபோது ‘சரணாகதி’ ஆகிறது. இரண்டும் ஆத்மார்ப்பணந்தான். இரண்டிற்கும் ஒரே பலன்: உயிருள்ளபோதே மோக்ஷானந்தம் பெறுவதான ஜீவன் முக்தி.

(அடுத்த பதிவிலிருந்து பூஜை, பாராயணம், ஜப முறைகளையும், ஆகம விதிப்படி அல்லது அவைகளுக்கு விதிக்கப்பட்ட முறைகளின்படி செய்வதையும் அதன் பலன்களையும் விரிவாக பார்ப்போம்)

சுபம்